Thursday, July 2, 2015

வானவில்




வானவில்லுக்காக வானத்துடன் வசனித்தல்



வானவில்லை வர்ணிக்க
வசனங்கள் சிலதேடி
வானத்துடன் வசனித்தேன்

வானவில்
காலக்கிளி அணிந்த
கழுத்து ஆரம் என்றேன்
இல்லை என்று நாணியது வானம்

வானவில்
மாலைப்பெண்ணின்
மசக்கை மருதாணி
உடுக்கள் சுற்றும்
குடை ராட்டினம்
குளிர்காலம் அனுப்பிய
வெளிநாட்டுக் கடிதம்

வானவில்
மின்னல் பெண்ணின்
வர்ணப் புகைப்படம்
காற்றில் கலையாதää
கற்பனை ஒப்பனை
மாரிக் கன்னியின்
மார்புத் தாவணி

வர்ணித்து வரைந்தேன்.
இல்லையில்லை என்று
வெட்கியது வானம்

வானவில்
ஆதி எறிந்தää
பாதி மறைந்த பம்பரம்
திசைக் கோணமளக்க
பரிதி வைத்த பாகைமாணி

இந்திரவில்லின் வர்ணப் பதிப்பு
விப்ஜியோர் கம்பனியின்
வர்ணத் தொலைக்காட்சி
ஏழ்நிறக் கட்சிகளின் கூட்டணிக்கொடி
கண்களுக்குக் கதிர்கள்
எழுதிய ஏழ்சீர் விருத்தம்

புகழ்ந்து புனைந்தேன்
இல்லவேயில்லை
என்று புன்னகைத்தது வானம்

வானவில்
மேகங்கள் காணும்
கனவுக் கண்காட்சி
அந்திமாலை அணிந்த
வர்ணத் தாலி
வான ஐயரின்
வர்ணப் பூணூல்
பூமிக்கு வராத விண் பூங்கா

தமிழால் தடவி விட்டேன்
இல்லையே என்று தயங்கிய வானம்-

தான் ஒன்றுசொன்னது-
வானவில்
மழையின் ~மின்னஞ்சல் முகவரி

அட-
அதிசயித்து
அண்ணார்ந்து பார்த்தேன்

காணவில்லை
வானவில்லை..
00)




No comments:

Post a Comment