Thursday, July 2, 2015

கறுப்பு வெள்ளையில் ஒரு கலர் கனவு

கறுப்பு வெள்ளையில் ஒரு கலர் கனவு




சின்னஞ்  சிறிசில் சீனத்-உன்னுடன்
சின்ன   வீடு கட்டி மண்ணுடன்
கூமாக் கூமாப் பொத்தி என்னுடன்
சின்ன விரலில் நெட்டிமுறித்தும்

சத்தம்  போட்டுச் சண்டை பிடித்து
அத்தம்  விட்டுச் சத்தியம் செய்து
கத்த   வீட்டு   ஒறட்டி வெறுத்து
அத்த   மாபழமா விரல்கள் தொட்டு

நெத்தியில் சிப்பிப் பொட்டு வைத்து
தத்திக்   கோடு   எட்டிப் பாய்ந்து
பொத்திக் கண்கள்  கூட்டிச் சென்று
சித்தெ   றும்புக்  காட்டில் விட்டும்

சருகு   மிட்டாய்   சாம்பல் அப்பம்
அடுக்குச் சட்டி ஆரத்திச் செப்பு
குருத்து  மாலைக் குரும்பட்டிப் பதக்கம்
கழுத்தில் சூடிக்   கலியாணம் முடித்தும்

அலுப்பே யின்றி   அஸரில் வந்து
அலிப்பே தேயிதே  ஓதித் தந்த
லெப்பை மிதிவடிக்  கட்டையும் ஊத்தைத்
தொப்பியும் திருடிப் பிரம்படி பட்டும்

செத்தைக்  குடிலில்  ஒருநாள் மார்பில்
மெத்தெனச் சாய்ந்து  வியர்த்துக் கிடந்ததும்

இத்தனை   நினைவும் சட்டென வந்தது
சீனத்  துனையுன்  கணவனுடன் கண்டதும்.

(1989)

No comments:

Post a Comment